புதுப்பொலிவு பெற்ற ராமேஸ்வரம் கோயில் தேர்கள்!
ADDED :4149 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ரூ.4 லட்சத்தில் சுவாமி, அம்மன் மரத்தேர்களுக்கு மூங்கிலில் ஆன அழகான கூண்டுகள் பொருத்தப்பட்டு, தேரோட்டம் நடைபெறுகிறது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா, ஜூலை 21ம் தேதி, கொடி ஏற்றத்துடன் துவங்கியது. ஜூலை 29 நடைபெறவுள்ள ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு, 40 அடி உயரமுள்ள பழமையான சுவாமி, அம்மன் தேர்கள், ரூ.4 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. தேர்களில் சேதமடைந்த கம்புகளை அகற்றி, புதிய பனை மரச்சட்டங்கள் ஊன்றப்பட்டன. தேர் மேல்புறத்தில் மூங்கிலில் ஆன அழகு கூண்டுகள் நேற்று பொருத்தப்பட்டன. ஜூலை 29, காலை 10.35க்கு தேரோட்டம் நடக்கிறது.