42 அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா!
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது.ராமநாதபுரம், மண்டபம், உச்சிப்புளி, தங்கச்சிமடம், திருவாடானை, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், கீழத்தூவல் உள்பட 42 அம்மன் கோயில்களில் ஜூலை 22ல் முத்து பரப்புதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது. இதையொட்டி தினமும் இரவு இளைஞர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன் தினம்(ஜூலை 29) மாலை அம்மன் கரகம் குளம், கண்மாய், கடற்கரை பகுதிகளில் இருந்து கோயில்களுக்கு எடுத்து வரப்பட்டது. இதன்பின் முளைப்பாரிகளுடன் அம்மன் கரகம், கோயிலை சுற்றி வலம் வந்தது. நேற்று காலை அம்மன் கரகம் நகரில் வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் ஒயிலாட்டத்துடன் அம்மன் கரகம், முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துசென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இக்கோயில்களில் ஆக.5ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.