நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்!
திருவிடைமருதூர், நாச்சியார்கோவிலில் சீனிவாசபெருமாள் கோவில் உள்ளது. இங்கு மூலவராகவும் உற்சவராகவும் கல்கருட பகவான் அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும் சக்கரத்தாழ்வார் ஹோமம் 4 நாட்கள் விழாவாக நடைபெறுவது சிறப்பம்சமாகும். 43-வது ஆண்டாக நடைபெறும் சுதர்சன ஹோமம் கடந்த 26-ந்தேதி காலை தொடங்கியது. தொடர்ந்து காலை ஹோமம், மாலை ஹோமம் திருமஞ்சனம் என நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.ஆகமபட்டாச்சார் பத்ரிநாராயணன், ஆலய பட்டாச்சார்கள் கண்ணன், நீலமேகம், கோபி, லஷ்மிநரசிம்மன், வாசு ஆகியோர் சிறப்பு ஹோமங்களை செய்தனர். 4-ம் நாளான நேற்று முன்தினம் காலை ஹோமம், மாலை ஹோமம், திருமஞ்சனம், அன்னதானம் நடைபெற்றது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சியளித்தார். வஞ்சுளவல்லி தாயார், சீனிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் சக்கரத்தாழ்வாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இரவு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாநாட்களில் பல்வேறு இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.