மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆக., 18ல் குண்டம் இறங்கும் விழா
நாமக்கல்: மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட், 18ம் தேதி குண்டம் இறங்கும் விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த, என்.கொசவம்பட்டி கவரா நகரில், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கவரா செட்டியார்களுக்கு சொந்தமான இக்கோவிலில், இந்தாண்டு விழா, நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருவதலுடன் துவங்கியது.நாமக்கல் ஐயப்பன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள் கோவிலை அடைந்தனர். பகல், 2 மணிக்கு புண்ணியாசானம், மாலை, 4.30 மணிக்கு, பொங்கல் படைத்து பூஜை செய்தல், இரவு, 7.30 மணிக்கு கம்பம் மற்றும் கும்பம் அலங்கரித்து எடுத்து வரப்பட்டது.இன்று துவங்கி, 19ம் தேதி வரை தினமும் இரவு, 7 மணிக்கு கிராம பூஜை நடக்கிறது. ஆகஸ்ட், 17ம் தேதி காலை, 7 மணிக்கு திருத்தேர் பூட்டப்படுகிறது. மதியம், 3 மணிக்கு திருத்தேரில் கலசம் வைக்கப்படுகிறது. அன்று மாலை, 3 மணிக்கு, ஸ்வாமி கிணறு சென்று பூஜை செய்து, அம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றப்படுகிறது. ஆகஸ்ட், 18ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு பெண்கள் அங்கபிரதட்சணம் செய்தல், காலை, 6 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் வேடுபரி வருதல், மாலை, 6 மணிக்கு அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அங்கபிரதட்சணம் செய்யப்படுகிறது.ஆகஸ்ட், 19ம் தேதி காலை, 9 மணிக்கு அம்மன் திருத்தேர் ஊர் சுற்றி பவனி வருகிறது. அதை தொடர்ந்து காலை, 10 மணிக்கு கிடா வெட்டு, மாலை, 6 மணிக்கு கம்பம் பிடுங்கி சாமி கிணற்றில் விடப்படுகிறது. ஆகஸ்ட், 20ம் தேதி, இரவு, 7.30 மணிக்கு, அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.விழாவை முன்னிட்டு, பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.