உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வழிபாடு : 4 தலைமுறையாக தொடரும் வினோதம்!

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வழிபாடு : 4 தலைமுறையாக தொடரும் வினோதம்!

நாமக்கல்: நாமக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா, நான்கு தலைமுறையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் அடுத்த, நல்லிபாளையத்தில், 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்துக்கு சொந்தமான, அன்னை காமாட்சியம்மன் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதம், ஸ்வாமிக்கு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.காமாட்சியம்மன் வழிபாடு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று, இரவு, 9 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடம் எடுத்து வருதல் மற்றும் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.தீர்த்தக்குடங்களை திருமணமாகாத வாலிபர்கள் எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து, புற்றுக்கண்ணில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, ஸ்வாமி உருவம் செய்தனர். நேற்று, மதியம் 12 மணிக்கு பூஜை செய்து, கிடாவெட்டி ஸ்வாமிக்கு பலியிட்டனர். தொடர்ந்து சமையல் செய்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அதில், ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கும், வெளி நபர்களுக்கும் அனுமதியில்லை.இது குறித்து 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் கூறியதாவது:பல நூறு ஆண்டுகளுக்கு முன், எங்கள் சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் போர் நடந்தது. இதில், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் அனைவரும் இறந்தனர். இதையடுத்து, எங்கள் முன்னோர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தினர். அதனால், காமாட்சி அம்மனை வழிபடும் போது ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த வழிபாடு நான்கு தலைமுறையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இரண்டு நாட்கள் நடக்கும் விழாவில், முதல் நாள் புற்றுக்கண்ணில் இருந்து மண் எடுத்து வந்து, ஸ்வாமி உருவம் செய்து பூஜைகள் செய்யப்படுகிறது. மறுநாள் ஸ்வாமிக்கு கிடா பலியிடப்படுகிறது. அதை தொடர்ந்து அங்கேயே உணவு பரிமாறப்படுகிறது. மீதமான உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. அதற்காக குழி ஏற்படுத்தப்பட்டு அவற்றில் கொட்டி மூடி விடுவோம். விழாவுக்காக, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் தலைக்கட்டு மற்றும் குண்டல் வரி வசூல் செய்யப்படுகிறது. இன்று பிறந்த ஆண் குழந்தைக்கும் வரி வசூல் செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !