வைகை அணையில் மழைவேண்டி வேள்வி பூஜை
ஆண்டிபட்டி : தேனி மாவட்டம் வைகை அணை நீர் தேக்கப்பகுதி அருகே மேல்மருவத்தூர் ஆதிபராதி ஆன்மிக இயக்கம் மற்றும் வழிபாட்டுமன்றங்கள் சார்பில் மழை வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த ஆண்டும் தேனி மாவட்டம் மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைக்கான அறிகுறிகள் இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் மட்டுமே வைகை அணையில் தேக்கப்பட்டு வருகிறது. அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் வைகை அணை நீர் பாசன பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்கு அணை திறக்கப்படவில்லை. இந்நிலையில் அணையில் குறிப்பிட்ட அளவு நீர் இருந்தால் மட்டுமே அடுத்த மாதத்திலிருந்து, இரண்டாம் போக சாகுபடிக்கு தொடர்ந்து நீர் திறக்க முடியும். எனவே, வைகை அணை நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்யவேண்டி மேல்மருவத்தூர் ஆதிபராதி ஆன்மிக இயக்கம் சார்பில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. வைகை அணை உதவி பொறியாளர் ராஜகோபால் தி கொடியேற்றினார். மேல்மருவத்தூர் ஆதிபராதி ஆன்மிக இயக்க மதுரை மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர்கள் சதீஷ்குமார் (இடுக்கி), ராமச்சந்திரன் (தேனி), தேனி மாவட்ட ஆலோசகர் தியாகராஜன், மதுரை மாவட்ட துணைத்தலைவர் கோகுல்நாத்பிரேம்சந்த் முன்னிலை வகித்தனர்.புலவர் முத்துகிருஷ்ணன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன் வேள்வி பூஜையை துவக்கி வைத்தார். வைகை அணை உதவி பொறியாளர்கள் கணேசமூர்த்தி, குபேந்திரன் ஆகியோர் அன்னதானத்தை துவக்கி வைத்தனர். மத்திய மண்டல வேள்வி பொறுப்பாளர் அசோகன், ஆலோசகர்கள் கனகராஜ், தியாகராஜன், ஆந்திரா பகுதி துணைத்தலைவர் ராம்பிரசாத் உட்பட மதுரை, தேனி மாவட்டங்களைச்சேர்ந்த ஆதிபராதி வழிபாட்டு மன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் தி கோஷத்துடன் வேள்வி பூஜையில் பங்கேற்றனர்.