உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடித்திருவிழாவில் சாட்டை அடி வாங்கி பெண்கள் நேர்த்திக்கடன்!

ஆடித்திருவிழாவில் சாட்டை அடி வாங்கி பெண்கள் நேர்த்திக்கடன்!

மணப்பாறை: மணப்பாறை அருகே, மொண்டிப்பட்டி சென்னப்பன், மகாலட்சுமி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டியில் சென்னப்பன், மகாலட்சுமி, பீரேஷ்வர ஸ்வாமி, அகோரவீர புத்திரர், ஏழுகன்னிமார், பாப்பாத்தியம்மாள், காவேரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. குரும்பர் இனமக்கள், குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் ஆடித்திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும், பூசாரியிடம் சாட்டையால் அடிவாங்கியும், வேண்டுதல் நிறைவேற்றிக்கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த ஆண்டு ஆடித்திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை நடந்த விழாவில், குரும்பர் இனமக்கள் பாரம்பரிய சேர்வை நடனமாடினர். ஸ்வாமி அருள்வந்த கோவில் பூசாரி சுப்பிரமணி, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றினார். பிறகு, பெண்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் நாகராஜன், முன்னாள் யூனியன் சேர்மன் கலைச்செல்வி மற்றும் கரூர், தாத்தையங்கார்பேட்டை, தேனி, கம்பம், வாடிப்பட்டி, வையம்பட்டி, மோகனூர், கணேசபுரம், கத்தாளகுரும்பபட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட குரும்பர் சமூத்திளனர் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !