சக்தி புற்று மாரியம்மனுக்கு ஆடிப்பெரு விழா உற்சவம்
ADDED :4128 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி தியாகதுருகம் ரோட்டில் உள்ள சக்தி புற்று மாரியம்மன் கோவிலில் 27வது ஆண்டு ஆடிப்பெருவிழா உற்சவம் நடந்தது. கடந்த 13ம் தேதி காப்புக்கட்டுதல் நடந்தது. மறுநாள் கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தலைத் தொடர்ந்து பூங்கரகம், அக்னி கலசம், தீர்த்தக்குடம், பால் குடம் ஏந்தி பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மகா தீபாராதனை காண்பித்து சக்தி புற்று மாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். மூன்றாம் நாள் மஹா மாரியம்மன் உற்சவமூர்த்தி சிலை அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், விடையாற்றி அன்னம் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.