தான்தோன்றி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார், தான்தோன்றி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவின், 10ம் நாளான நேற்று, தீ மிதி திருவிழா நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், பழமையான தான்தோன்றி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கடந்த 8ம் தேதி மாலை, கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. இரவு, வேப்பிலை கரகத்துடன் சுவாமி ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.இந்நிலையில், நேற்று காலை, ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து, படையல் போட்டு சுவாமியை வழிபட்டனர். இதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு மேல், காப்பு கட்டிய பக்தர்கள், அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடி, பூங்கரகத்துடன் வந்து தீ மிதித்து, அம்மனை வழிபட்டனர். இவ்விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இரவு, தான்தோன்றி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தான்தோன்றி அம்மன் விழா குழுவினர் செய்திருந்தனர்.