உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்

மாமல்லபுரம் : மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், நேற்று துவங்கியது. மாமல்லபுரம், ருக்மணி சத்யபாமா உடனுறை நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் புகழ்பெற்றது. இங்கு, நேற்று, கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், கோலாகலமாக துவங்கியது. இம்மாதம் 28ம் தேதி வரை, உற்சவம் நடக்கிறது. துவக்க நாளான நேற்று, சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமி, ஆயர்பாடி எழுந்தருளிய அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோன்று, தினமும் மாலை 3:00 மணியளவில், திருமஞ்சனம் செய்து, தினம் ஒரு அலங்காரத்தில், சுவாமி காட்சியளிக்கிறார்.

திருத்தணியில்...: திருத்தணி, பை - பாஸ் சாலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, யாதவர் மகா சபை சார்பில், கிருஷ்ணர் திருவுருவப் படம் வைத்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடத்தினர். தொடர்ந்து, கிருஷ்ணர் உருவம் பொருத்திய கொடியை, யாதவர் மகா சபையின் செயலர் முனிரத்தினம் ஏற்றி வைத்தார்.பின், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் மற்றும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், திருத்தணி அடுத்த, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், காலையில், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், திருத்தணி அடுத்த, நெமிலி கிராமத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !