வில்லியனுார் கோவில் ராஜகோபுரம் ரூ.48 லட்சம் செலவில் புனரமைப்பு!
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தை பழுதுபார்த்து வண்ணம் தீட்டும் பணி, துவங்கியது.வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் முன் மண்டபம் மற்றும் உள் வளாகத்தில் பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் ரூ.48 லட்சம் செலவில், திருக்காமீஸ்வரர் கோவில் தெற்கு பகுதியில் உள்ள 112 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தை பழுதுபார்த்து வண்ணம் தீட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு, அதற்கான பணி ஆணையை கடந்த வாரம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார். ராஜகோபுரம் பழுதுபார்க்கும் பணி, நேற்று காலை சிறப்பு பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சியில், தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீட்டுக்குழுத் துணைத்தலைவரும், பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளருமான சத்தியமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் செல்வராசு, கோவில் நிர்வாக அதிகாரி மனோகரன், திருப்பணிக்குழு தலைவர் பூபதி, உறுப்பினர்கள் சரவணன், சங்கர், பாண்டியன், ஜோதி, புகழேந்தி, குணசேகரன், ஸ்தபதி அழகுமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.