விநாயகர் சிலை ஊர்வலத்தில் மைக் செட், டிரம் செட்டிற்கு தடை!
மதுரை : மதுரையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள் நடத்தும் ஊர்வலத்திற்கு போலீசார் கூடுதலாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க மாசுக்கட்டுப்பாடு வாரியம், சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி போலீசார் 36 கட்டுப்பாடுகளை விதித்தனர். ஆண்டுதோறும் இவை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு சில கட்டுப்பாடுகளை கூடுதலாக போலீசார் விதித்துள்ளனர்.மதுரையில் ஆக.,29 முதல் 31 வரை மூன்று நாட்கள் மாசி வீதிகளில் தினமும் மாலை ஊர்வலம் நடக்கிறது. நேற்று காலை வரை 120 சிலைகளுக்கு அனுமதி கேட்டு போலீசாருக்கு இந்து அமைப்பு நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர். அதேசமயம், இந்து முன்னணி சார்பில் 200 சிலைகள் ஊர்வலத்தில் எடுத்துவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் கே.எம். பாண்டியன் கூறுகையில், சிலைகளுக்கு முறைப்படி அனுமதி கேட்டுள்ளோம். இந்தாண்டு ஊர்வலத்தின்போது மைக்செட், டிரம்செட்டை பயன்படுத்தக்கூடாது என போலீசார் வாய்மொழியாக தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து மறுபரிசீலினை செய்யுமாறு கேட்டுள்ளோம், என்றார்.