கோவையில் ஒரே நாளில் 325 சிலைகள் விசர்ஜனம்!
கோவை : கோவை மாநகர் மற்றும் மாநகரை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில், ௩௨௫ சிலைகள் கரைக்கப்பட்டன. கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பா.ஜ., அனுமன் சேனா, சிவசேனா உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், 340 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்த சிலைகளை விசர்ஜன ஊர்வலமாக எடுத்து சென்று, அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 126 விநாயகர் சிலைகள், மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று, குளங்களில் கரைத்தனர். குறிச்சி குளத்தில், 66 விநாயகர் சிலைகளும், குனியமுத்துாரில் 21, சிங்காநல்லுாரில் ௧௫, வெள்ளக்கிணறு பகுதியில் 10, செங்குளம், சூலுாரில் தலா 3, வாளையாறு, சாமளாபுரத்தில் தலா ஒரு சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. புறநகர் பகுதியான, வடவள்ளி பகுதியில் வைக்கப்பட்ட 41 சிலைகள் , அங்குள்ள நாகராஜா குளத்திலும், ஆலாந்துறை, தொண்டாமுத்துார், காருண்யா நகர் பகுதியில் பூஜை செய்யப்பட்ட 39 சிலைகள், சாடி வயல் ஆற்றிலும், பேரூர் பகுதியில் பூஜை செய்யப்பட்ட 19 சிலைகள், பேரூர் பெரிய குளத்திலும் கரைக்கப்பட்டன.கோவை மாநகர் மற்றும் மாநகரை ஒட்டிய புறநகர் பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும், 325 சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலம் நடந்த இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விநாயகர் ஊர்வலம் சென்ற சில இடங்களில், போக்குவரத்து திருப்பி விடப்பட்டன.