கங்கையை சுத்தப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்காதது ஏன்?
புதுடில்லி: புனித கங்கை நதி மாசடைந்து உள்ளது. அதை சுத்தப்படுத்த, மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளால், 200 ஆண்டுகள் ஆனாலும் சுத்தப்படுத்த முடியாது. எப்படி அந்த புனித நதியின் மாசற்ற தன்மையை காப்பாற்ற போகிறீர்கள் என்பதை, விலாவரியாக, விளக்கமாக, மூன்று வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.
புனித கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள், டி.எஸ்.தாக்குர் மற்றும் ஆர்.பானுமதி தலைமையிலான, ’டிவிஷன் பெஞ்ச்’சில் விசாரிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பான வழக்கு, கடந்த மாதம் 13ல், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ’கங்கையை சுத்தப்படுத்துவோம் என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. பா.ஜ., அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இதற்கான அவசர நடவடிக்கை எடுக்காதது ஏன்? பிற விவகாரங்களை பின்னுக்கு தள்ளி வைத்து விட்டு, கங்கையை சுத்தப்படுத்துவதற்கு, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அதற்கு அப்போது பதிலளித்த, சொலிசிட்டர் ஜெனரல், ’கங்கையை சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள, தேசிய, கங்கை நதி பாசன ஆணையம், மத்திய, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையிடம் இருந்து, மத்திய நீர்வளத் துறை மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கைக்கு புத்துயிர் அளித்தல் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது’ என, தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த வழக்கு, நீதிபதிகள் தாக்குர் மற்றும் பானுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான, சொலிசிட்டர் ஜெனரல், ரஞ்சித்குமார், பதில் மனு தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதிகள், மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்தனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கங்கையை சுத்தப்படுத்த, மத்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை பார்த்தால், இன்னும், 200 ஆண்டுகள் ஆனாலும் சுத்தப்படுத்த முடியாது என, நினைக்கிறோம்.இது ஒரு கனவுத் திட்டம்; சுத்தப்படுத்தப்பட்ட கங்கையை பார்க்க நாங்கள் இருப்போமா, இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. வருங்கால தலைமுறைக்காவது, சுத்தமான கங்கையை நதியை காட்ட வேண்டாமா?கங்கை நதி, 2,500 கி.மீ., நீளம் கொண்டது. அதை சுத்தப்படுத்த, வெளிநாட்டு நிதியை எதிர்பார்க்கிறீர்கள் என்பது பற்றி, எங்களுக்கு கவலையில்லை. அதன் இயல்பு, புனிதத்தன்மை மாறாமல், அதை எப்படிசுத்தப்படுத்தப் போகிறீர்கள் என்பதை, சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? கங்கையின் புனிதத்தன்மை மாறாமல், அதன் மாசை எப்படி அகற்றப் போகிறீர்கள், அதற்காக என்னென்ன திட்டங்களை பின்பற்றப் போகிறீர்கள்? அதை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என்பதை, விலாவரியாக, ஒவ்வொரு கட்டமாக, எங்களுக்கு விளக்கமாக அறிக்கை அளிக்க வேண்டும்.
இதை, மூன்று வாரங்களில் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். முடிந்தால், கம்ப்யூட்டர் உதவியுடன், ’பவர் பாயின்ட்’ என்ற விளக்க முறையில், தெரிவிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் தெரிவிக்கும் அம்சங்கள், பாமர மக்களுக்கும் புரிய வேண்டும். அதற்காக, துணை பதில் மனுவை தாக்கல் செய்யுங்கள்.எப்படி இந்த பெரிய திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தப் போகிறீர்கள் என்பதை, விளக்கமாக கூறினால் தான், திட்டத்தை செயல்படுத்த உடன்படாத, கங்கையை மாசுபடுத்தும் நிறுவனங்களை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடியும்; அதன் மூலம், மத்திய அரசுக்கு உதவ முடியும்.இவ்வாறு, நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்து, வழக்கை, இம்மாதம் 24க்கு ஒத்திவைத்தனர்.
கண்டிப்பாக செயல்படுத்தியே தீருவோம் - மத்திய அரசு: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கங்கையை சுத்தப்படுத்தியே தீருவோம்’ என, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல, மத்திய அரசு அதை கண்டிப்பாக நிறைவேற்றும். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டம், மிகப் பெரியது. 29 பெரிய நகரங்கள், 23 சிறிய நகரங்கள், 49 நகரங்கள் வழியாக, இந்த நதி பாய்கிறது. கங்கைக்கு புத்துயிர் அளிப்பதை, தேசிய முக்கியத்துவமாக அரசு கருதுகிறது.இந்தப் பணியை நிறைவேற்றும் முன், அதன் இயற்கை தகவமைப்பு, எப்படி எல்லாம் மாசடைகிறது, நதியை சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியம், அதற்கான விழிப்புணர்வு என, பல கட்டங்களாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இந்த பணியில், பல அமைப்பு கள், பலவிதமான அணுகுமுறைகள், ஆலோசனைகள், பல துறை ஈடுபாடு போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, பல துறைகளின் செயலர்கள் ஆலோசனை மேற்கொண்டு அளித்துள்ள அறிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது.கங்கை நதி பாசன மேலாண்மையை, எவ்வாறு திறம்பட மேற்கொள்வது என்பது குறித்து, ஏழு ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் வல்லுனர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளனர். அந்த அறிக்கை, இந்த ஆண்டு டிசம்பருக்குள் கிடைக்கும் என, நம்புகிறோம்.அதை மத்திய அரசு பரிசீலித்து, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கையை இறுதி செய்து, அதற்கான திட்டத்தை, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும். இதற்காக, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.’நமாமி கங்கே’ என்ற பெயரில், கங்கையை பாதுகாக்கவும், அதை மேம்படுத்தவும் கொள்கை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.கங்கை நதி மட்டுமின்றி, கேதர்நாத், ஹரித்வார், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, டில்லி நகரங்களை அழகுபடுத்தவும், அப்பகுதியில் நதியை சுத்தப்படுத்தவும், இந்த ஆண்டிலேயே பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான கூடுதல் நிதிக்காக, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக வங்கியின் உதவியை நாடியுள்ளோம். மத்திய அரசின் அமைச்சகங்கள், இதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. வல்லுனர்களின் உதவி மற்றும் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.