உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வெட்டுகளின் மீது வெள்ளை அடிக்க வேண்டாம்!

கல்வெட்டுகளின் மீது வெள்ளை அடிக்க வேண்டாம்!

கோவில்கள், வெறும் வழிபாட்டிடங்கள் மட்டுமல்ல; நம் பண்பாட்டின் கட்டட வடிவங்கள். வரலாறு, நாகரிகம், முன்னோர் பெருமை, இலக்கியம் உள்ளிட்டவற்றின் வாழும் அடையாளங்கள். ஆனால், அந்த கோவில்களை நாம் முறையாக பராமரிப்பதில்லை. பராமரிக்க வேண்டிய அறநிலையத் துறையும், வாடகை வசூலிப்பதிலேயே கவனமாக இருக்கிறது. அரசு செய்ய வேண்டிய திருப்பணிகளை, பல்வேறு இறைபணி மன்றங்கள் செய்து வருகின்றன. அவற்றில், சென்னையைச் சேர்ந்த, ‘இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்’ குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பினர், சென்னை, காஞ்சிபுரம், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்ட கோவில்களில், உழவாரப்பணி செய்துள்ளனர். அவற்றில், 100க்கும் மேற்பட்ட கோவில்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவர்கள் உழவாரப் பணி செய்த பின், 53 கோவில்களில் கும்பாபிஷேம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்தக் கோவிலில், திருப்பணி மேற்கொள்கின்றனரோ, அந்தக் கோவில் இருக்கும் இடத்தில் இருந்து, 1 கி.மீ.,க்கு முன்னரே, மேளதாளம், கைலாய வாத்தியங்கள் முழங்க, அடியார்களுடன், பேரணி நடத்துவர். அக்கோவிலின் சிறப்பை பகுதிவாசிகளுக்கு உணர்த்தும் வகையில், சிறப்பு துண்டு பிரசுரங்கள் வழங்குவர். வானதிர, தேவார, திருவாசக பாடல்களை பாடி வருவர். இதுவே, இவர்களின் நடைமுறை. ஒவ்வொரு மாதத்தின், நான்காவது ஞாயிற்றுக்கிழமையில், உழவாரப் பணியை மேற்கொள்கின்றனர். கோவில்களின் சுற்றுப்பிரகாரம், நந்தவனம் பகுதிகளில் உள்ள, தேவையற்ற செடி, கொடிகளை அகற்றுதல், சுத்தம் செய்தல், வெள்ளை அடித்தல், சுவாமி வஸ்திரங்களை சலவை செய்தல், பூஜை பொருட்களை துலக்குதல், பிரகாரத்தில் திருமுறைப் பாடல்களை எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பணி செய்யும் எண்ணம் எப்படி வந்தது? இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் தலைவர், கணேசன் கூறியதாவது: கடந்த, 2001ல், பெருங்களத்துாருக்கு அருகில் உள்ள நெடுங்குன்றத்தில் என் நண்பரை சந்திக்கச் சென்றேன். அவர், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு, வயதான ஒருவர், கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். விசாரித்தபோது, தனது பெயர் கிருஷ்ணமூர்த்தி என்றும், தென்னக ரயில்வேயில்  ஓய்வுபெற்ற பின், உழவாரப் பணியில் ஈடுபடுவதாகவும் சொன்னார்.  மேலும், உழவாரப்பணியின் அவசியம் குறித்தும் எங்களுக்கு விளக்கினார். அன்றிலிருந்து, நாங்களும் உழவாரப் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆரம்பத்தில், ஆறு உறுப்பினர்களுடன் துவங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது, ஆயிரம் உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. உறுப்பினர்கள் எவரும், உழவாரப் பணிக்காக, கட்டணம்  செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. துவக்கத்தில், வாகனங்கள் ஏற்பாடு செய்து, அடியார்களை வரவழைத்து, திருப்பணி மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்தனர். அது சிரமமாக இருந்ததால், இப்போது, உழவாரப் பணியில் பங்கேற்கும் அடியார்கள், தாங்களே அந்தந்த கோவில்களுக்கு சென்று விடுகின்றனர். “அன்னதானம் (அன்னம் பாலிப்பு) மட்டும், இறைபணி மன்றத்தைச் சேர்ந்தது,” என்கிறார் கணேசன். எனினும், இறைபணி மன்றத்தின், உழவாரப் பணிகளுக்கு, அறநிலையத் துறை முழுமையான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற ஆதங்கம் அந்த அமைப்பினரிடம் உள்ளது. அறநிலைய துறை பல கட்டுப்பாடுகளை விதிப்பதால், தங்களை போன்ற அமைப்பினர், கோவில் பணிகளுக்கு முன்வருவதில் தயக்கம் காட்டுவதாக தெரிவித்தனர். உழவாரப் பணியின் அவசியம் குறித்து கணேசன் கூறுகையில்,“கோவில்களில் ஏன் உழவாரப் பணி செய்ய வேண்டும் என்பதை பகுதிவாசிகளுக்கு விளக்கினாலே போதும்; அவர்களே அப்பணியை தொடர்வர். போதுமான விழிப்புணர்வு இல்லாததால் தான், பெரும்பாலான கோவில்கள் புதர் மண்டிக் கிடக்கின்றன. அவற்றை பார்ப்பதற்கே வேதனையாக இருக்கும்,” என்றார். மேலும், “முன்பு உழவாரப் பணி செய்திருப்பவர்கள், அங்குள்ள கல்வெட்டுகளின் மீது, வெள்ளை அடித்திருப்பர். இது தவறானது. கல்வெட்டுகள், ஆயிரம் ஆண்டுக்கால ஆவணம். அதை பாதுகாக்க வேண்டிய நாமே, முற்றிலும் சீரழிப்பது, பல தவறானது. நாங்கள் வரலாற்றை மீட்டெடுக்கவே முயற்சிக்கிறோம்,” என்றார் அவர்.

தொடர்புக்கு: 98401 23866


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !