உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி!

கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருவூர் சித்தர் சாப விமோசனம் அளித்தலும், கருவூர் சித்தருக்கு சந்திரசேகர்-பவானி அம்பாள் காட்சி கொடுத்தல் வைபவமும் நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருநாள் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 9வது நாளில் சொக்கப்பனை முக்கில் இருந்து கருவூர் சித்தர் மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. அப்போது நெல்லையப்பர் கோயில் வாசலில் நின்று நெல்லையப்பா, நெல்லையப்பா என கருவூர் சித்தர் அழைத்தார். அதற்கு நெல்லையப்பர் செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமடைந்த கருவூர் சித்தர், எருக்கும், குருக்கும் முளைக்க கடக என சாபம் கொடுத்துவிட்டு மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு கிளம்பிச்சென்றார்.

ஆவணி மூலத்திருநாளின் 10வது நாளான புதன்கிழமை இரவு 1 மணிக்கு கருவூர் சித்தரை சமாதானப்படுத்தி அழைத்துவர சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி அம்பாள், அகஸ்தியர், குங்கிலிய நாயனார் பல்லக்கில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து மானூர் அம்பலத்திற்கு எழுந்தருளினர்.காட்சி வைபவம் ஆவணி மூலத் திருநாளின் முக்கிய நிகழ்ச்சியான கருவூர் சித்தர் சாப விமோச்சனம் அளித்தலும், கருவூர் சித்தருக்கு மானூர் அம்பலத்தில் சந்திரசேகரர் நடனம் ஆடி காட்சி தருதலும், அடிக்கு ஆயிரம் பொன் கொடுத்து கருவூர் சித்தரை திருநெல்வேலிக்கு அழைத்து வரும் வைபவமும் செப்டம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை நடந்தது. காட்சி கொடுக்கும் போது தல புராண பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பாடினர். தொடர்ந்து விநாயர், அம்பலவாண சுவாமி, நெல்லையப்பர், காந்திமதியம்பாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள், ஷோடச தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரர்-பவானி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார பூஜைகள் நடந்தது. கருவூர் சித்தருக்கு, சந்திரசேகர்-பவானி அம்பாள் காட்சிகொடுத்த பின்னர், சாப விமோசனம் அளித்து, புராணப் பாடல்களை பாடி கருவூர் சித்தர் திருநெல்வேலி வந்து தொண்டர்கள் நயினாரையும், நெல்லையப்பரையும் வழிபட்ட வைபவமும் நடந்தது. நெல்லை டவுனிலும் கருவூர் சித்தருக்கு சுவாமியும், தொண்டர்கள் நயினாரும் காட்சி கொடுத்தனர். கருவூர் சித்தருக்கு காட்சி வைபவத்தை முன்னிட்டு திருவாலிபோத்தி சுவாமிக்கும் பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை, மானூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 25 கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி-அம்பாளையும், கருவூர் சித்தரையும் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !