கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
குரோம்பேட்டை : குரோம்பேட்டை கங்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். குரோம்பேட்டை, எம்.ஐ.டி., பாலம் அருகே, திருமலைக்குன்றுார் கங்கையம்மன் கோவிலில், ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா, கடந்த 4ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் மற்றும் மகா கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் துவங்கியது.கடந்த 5ம் தேதி, கோ பூஜை, முதற்கால பூஜைகளும், 6ம் தேதி, இரண்டு, மூன்றாம் கால பூஜைகளும், குரு ஓரையில், மந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதலும் நடைபெற்றன.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையுடன் துவங்கிய விழா, 6:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதியுடன் கடம் புறப்பாடும், 7:45 மணிக்கு, விமானங்களுக்கு சமகால கும்பாபிஷேகம், 8:10 மணிக்கு, மூலஸ்தான மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
இரவு சாமி புறப்பாடு, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இன்று முதல் அடுத்த 48 நாட்களுக்கு, மண்டல அபிஷேகம் நடைபெறும். திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேற்கு, கார்கில் வெற்றி நகரில் நாகாத்தம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அங்கு விநாயகர், முருகனுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.இக்கோவிலில் நேற்று காலை, 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் நாகாத்தம்மன் கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பிஷேகம் நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.