நாவிதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
திருப்பதி: திருமலையில், நாவிதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. திருமலையில், பக்தர்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி, தொலைபேசி மூலம் நடந்தது. பக்தர்கள் தங்கள் குறைகள் மற்றும் ஆலோசனைகளை, தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபாலிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருமலையில், பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த, அதிக நேரம் காத்திருக்கின்றனர். நாவிதர்கள் எண்ணிக்கை குறைவே அதற்கு காரணம். இப்பிரச்னையை தீர்க்க, நாவிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.தற்போது, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாவிதர்கள் மட்டுமே, முடி காணிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், தங்கள் பணியை சரியாக செய்யவில்லை என்றால், பக்தர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலே, மொட்டை அடித்து தங்களுடைய முடியை, திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்படுத்தப்படும் உண்டியலில், காணிக்கையாக சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்படும்.மேலும், 300 ரூபாய், விரைவு தரிசன டிக்கெட் இணையதள முன்பதிவில், பல இன்னல்கள் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடங்கி, 10 நாட்களே ஆகியுள்ளது. அதிலுள்ள குறைகளை தீர்க்க, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.