உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் திருவேங்கடவன் விஜயம்

கோவையில் திருவேங்கடவன் விஜயம்

கோவை : கோவை, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவின் பத்தாம் நாளான நேற்று,திருவேங்கடவன் விஜயம் நிகழ்ச்சி நடந்தது. திருமலை திருப்பதியில் ஏழுமலையானுக்கு அன்றாடம் நடைபெறும் வைபவங்கள் கோவை வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடத்தப்பட்டன. திருமலை திருப்பதியிலிருந்து, கொண்டு வரப்பட்ட, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, கோவில் பிரதான மண்டபத்தில் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.நேற்று காலை திருவேங்கடவன் விஜயம் நிகழ்ச்சி துவங்கியது. காலை 6.00 மணிக்கு சுப்ரபாத சேவை துவங்கியது. தொடர்ந்து தோமாலசேவை, சதுர்வேத பாராயணம், அர்ச்சன சேவை, நைவேத்தியம், திருமஞ்சனம், அஷ்டதல பாதபத்மபூஜை, லட்டுபடி, ஊஞ்சல், பிரம்ம உற்சவம், மாப்பிள்ளை அழைப்பு, கல்யாண உற்சவம் ஆகியவை நடந்தன. ஏகாந்த சேவையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. நிகழ்ச்சியை பெங்களூரு ஸ்ரீவாரி பவுண்டேஷன் வெங்கடேசமூர்த்தி குழுவினர் நடத்தினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த மதுசூதன ராவ் அன்னமய்யா கீர்த்தனைகளை பாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !