அம்மன் ஜாத்திரை திருவிழா: சிறப்பு ஆட்டு சந்தை!
பொதட்டூர்பேட்டை: அம்மன் ஜாத்திரை திருவிழாவை ஒட்டி, நேற்று பொதட்டூர்பேட்டையில் சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. இதில், 2,500 ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. பொதட்டூர்பேட்டையில், நேற்று முன்தினம் ஜாத்திரை திருவிழா துவங்கியது. இன்று இரவு அம்மன் ஊர்வலமும், நாளை பகல் (புதன்கிழமை) 11:00 மணிக்கு அம்மனுக்கு கும்பம் படைக்கப்படுகிறது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை திருவிழா நடக்கிறது. இதையடுத்து, ஊரே விழாக்கோலம் பூண்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை, பக்தர்கள் மாறுவேடம் அணிந்து, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர். மாறுவேடம் அணிந்த பக்தர்கள், ரதங்களில் ஊர்வலமாக வருவது பாரம்பரியமாக நடந்துவரும் நிகழ்ச்சி. ஒரு வார அம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகவும், அசைவ பிரியர்களை குறிவைத்தும், நேற்று பொதட்டூர்பேட்டையில் சிறப்பு ஆட்டு சந்தை நடந்தது. பள்ளிப்பட்டு சாலையில், இதற்காக 5,000 ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், நேற்று ஒரே நாளில், 2,500 ஆடுகள் விற்பனை ஆகின. வரும் வெள்ளிக்கிழமைக்குள், இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.