ஆற்றுப் பகுதியில் ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு!
போடி : போடி அருகே, ஆற்றுப் பகுதியில் மீன் பிடிப்பதற்காக மண் தோண்டிய போது, பாண்டியர் கால நந்திதேவர் ஐம்பொன் சிலை, கண்டுபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே கோடாங்கிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன், 30, என்பவர், வலையபட்டி கொட்டகுடி ஆற்றில், மீன் பிடிப்பதற்காக, ஆற்று மணல் பகுதியை தோண்டினார். அப்போது, மண்ணுக்குள் இருந்து, ஐம்பொன் சிலை ஒன்று கிடைத்தது. இது பற்றி, போடி தாசில்தார் பழனிக்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைத்தார். போடி சி.பி.ஏ. கல்லூரி வரலாற்றுத்துறை தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மைய பேராசிரியர்கள் கூறியதாவது: இந்த சிலையில் உள்ள நான்கு கைகளில், பின்புற வலது கையில் மலுவும், இடது புற கையில் மானும் உள்ளது. மற்ற முன்பக்க இரு கைகளும், கூப்பியபடி நின்ற நிலையில் உள்ளது; இது, நந்திதேவர் வடிவம். கி.பி.,9 10 ம் ஆண்டுகளில், பாண்டியர் காலத்தில், வலையபட்டியை சேர்ந்த கிச்சியார் என்பவர், உத்தமபாளையம் சமண பள்ளிக்கு, சமண சிற்பங்கள் செய்ய கொடை அளித்துள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், சமணத்தை பின்பற்றியிருக்கலாம். இதனால், சைவ சமயத்தை சேர்ந்த சிலைகளை ஆற்றுப்பகுதியில் மறைத்திருக்கலாம். இவ்வாறு கூறினர்.