உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாப விமோசனம் தந்த அனந்தசரஸ் குளத்தின் அவலம்!

சாப விமோசனம் தந்த அனந்தசரஸ் குளத்தின் அவலம்!

பூதகணங்களுக்கு, சாப விமோசனம் தந்ததாக கருதப்படும், ஸ்ரீபெரும்புதூர் அனந்தசரஸ் குளம், போதிய பராமரிப்பு இல்லாமல், சீரழிந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில், பழமையான ஆதிசேகவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு அருகில், அனந்தசரஸ் என்று அழைக்கப்படும் குளத்தில், பக்தர்கள் புனித நீராடி, கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இக்குளம், பாம்புகளால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், பூதகணங்கள் இக்குளத்தில் நீராடி, சாப விமோசனம் பெற்றதாகவும் ஐதீகம். ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து, சிங்கமுக கால்வாய் வழியாக, தண்ணீர் வரும் வகையில்,கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இக்குளம், 30 ஆண்டுகளுக்கு முன், தூர்வாரப்பட்டது. சிங்கமுக கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், குளத்திற்குள் கழிவுநீர் எளிதாக கலக்கிறது. குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் கலப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு, சுற்றுச்சுவர் அமைத்தும், ஸ்ரீபெரும்புதூர் ஏரியிலிருந்து, பைப் மூலம், தண்ணீர் கொண்டு வரவும், குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தவும், இந்து சமய அறநிலையத் துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !