மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா, கடந்த, ஆறு நாட்களுக்கு முன், கூழ் ஊற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினந்தோறும், காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் கோலாட்டமும் நடந்தது. இதில், கிட்டம்பட்டி, மாட்டான்மந்தை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் மாறுவேடமணிந்து கோலாட்டம் ஆடினர். நேற்று முன்தினம் மாவிளக்கு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்தனர். மேலும், ஆயிரக்கணக்கான ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, உறவினர்களுக்கு விருந்து கொடுத்தனர். நேற்று மதியம் கோவில் வளாகத்தில் எருது விடும் விழா நடந்தது. இதற்காக, வளர்க்கப்பட்ட ஏழு எருதுகள் கோவில் திடலில் விடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதனையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.