உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை விழா!

திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை விழா!

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த, ஆவணி மாத கிருத்திகை விழாவில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். ஐந்து மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி, முருகன் மலைக்கோவிலில், ஆவணி மாத இரண்டாம் கிருத்திகை விழா, நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் கோவில் வலம் வந்தார்.நேற்று, கிருத்திகை விழா மற்றும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மூலவரை தரிசிக்க, மலைக்கோவிலில் குவிந்ததால், பொது வழியில், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.மலைக்கோவிலில், வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாத நிலையில், நேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !