உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீப திருவிழா மஹாரதம் பழுது பார்க்கும் பணி!

கார்த்திகை தீப திருவிழா மஹாரதம் பழுது பார்க்கும் பணி!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, மஹாரதம் பழுது பார்க்கும் பணி துவக்கப்பட்டது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீப திருவிழா, நவம்பர், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிசம்பர், 5ம் தேதி, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று தீப திருவிழாவில், மஹா ரத தேரோட்டம் நடைபெறும். அன்று, பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் வீதி உலா வருவர். இதில், முருகன் தேர் இரண்டு ஆண்டுக்கு முன், தேரோட்டத்தின் போது சேதமடைந்தது. இதனால், இரண்டு மணி நேரம், தேரோட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தேர்களை பழுது பார்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தாண்டு, 63 அடி உயரமுள்ள, 10 டன் எடை கொண்ட மஹாரதம் வீதி உலா வரும்போது, எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதற்காக தேர்களை பழுது பார்க்கும் பணி நேற்று துவங்கியது. இதில், கலசம் வைக்கும் பீடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதை சீரமைக்கும் பணி நடக்கிறது. தேர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபடும், பரம்பரை ஆச்சாரிகள் துரை ஆச்சாரி தலைமையில் பணியை துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !