செஞ்சியில் பல்லவர் கால செக்கு கண்டுபிடிப்பு!
செஞ்சி: செஞ்சி அருகே பல்லவர் கால மருந்து அரைக்கும் செக்கை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட் டம், திண்டிவனம் அருகே கோனேரிகுப்பம் சரஸ்வதி கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ், விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் ர ங்கநாதன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா நாகலாம்பட்டு கிராமம் கஞ்சியூர் மலை பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த மலையடிவாரம் உள்ள ஏரியில் பாறை ஒன்றில் மருந்து அரைக்கும் செக்கு ஒன்று இருப்பதை இவர்கள் கண்டு பிடித்தனர். பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது : இது போன்ற கல் செக்குகளை மருந்து அரைக்க பயன்படுத்துவர். செக்கின் உள்புறம் உள்ள கல்வெட்டில் பாடிகாப்பான் அச்சிலையன் என்றும், செக்கிற்கு வெளியே ஸ்ரீபாடிகாப்பான் அச்சிலையன் செய்வித்த செக்கு எனவும் செதுக்கப் பட்டுள்ளது.
பாடிகாப்பான் அச்சிலையன் அச்செக்கினை உருவாக்கிய செய்தியைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்தில் பாடி காப்பான் என்பது படை அதிகாரியைக் குறிக்கும். இக்கல்வெட்டின் எழுத்தமைதி பல்லவர் காலத்தைச் சேர்ந்தது ஆகும். எனவே பல்லவர் காலத்தில் படை அதிகாரியாக அச்சிலையன் இருந்துள்ளான் என்பதையும், கஞ்சியூர் பகுதியில் மருத்துவப் பணிகள் நடந்திருப்பதையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த கல்வெட்டின் அருகே உள்ள மலைப்பகுதியில் சமணத் துறவிகள் தங்கிய சமண படுக்கைகள் உள்ளடக்கிய குகை உள்ளது. தமிழகத்தில் சமண துறவிகள் மருத்துவப் பணி ஆற்றியதை கல்வெட்டுக்களும், சமண துறவிகள் தங்கி இருந்த இடங்களில் உள்ள மருந்து குழிகளும் எடுத்து காட்டுகின்றன. இந்த மருந்து செக்கை இங்கு தங்கியிருந்த சமண துறவிகள் பயன்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு ரமேஷ் கூறினார்.