அமர்நாத் பனிலிங்க அரங்கு: நெல்லை பக்தர்கள் தரிசனம்!
திருநெல்வேலி: நெல்லையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நாளை வரை நடக்கிறது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகையில் ஆண்டுதோறும் ஜூன் மாத இறுதியில் துவங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரையிலும் பனிலிங்க தரிசனம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை பல்லாயிரம் பக்தர்கள் நேரடியாாக சென்று தரிசிக்கிறார்கள். மருத்துவ சான்றிதழ் பெற்றுச்செல்வது, பனிப்பாறைகளை கடந்துசெல்வது போன்ற சிரமங்களால் முதியோர்கள் செல்வது இயலாத காரியமாகிவிடுகிறது. எனவே அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நெல்லை சங்கீதசபாவில் தத்ரூபமாக அமைத்துள்ளனர். நெல்லையில் நேற்று 26ம் தேதி காலையில் நெல்லை மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி துவக்கிவைத்தார். நெல்லை எம்.பி.,பிரபாகரன், தென்காசி எம்.பி.,வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமர்நாத் குகையை போலவும் அங்கு பனிலிங்க காட்சியும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிறு வரை அமர்நாத் பனிலிங்க காட்சி நடக்கிறது. மேலும் பொதுமக்கள் ஆன்மீக ரீதியாக மேற்கொள்ளவேண்டிய தியானம், அமைதிக்கான நல்வழிகள் குறித்தும் துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டன. துவக்க நாளிலேயே ஏராளமான பொதுமக்கள் பனிலிங்கத்தை கண்டுகளித்தனர்.