நரசிம்மர் கோவிலில் நவராத்திரி ஸ்ரீ சுத்த ஹோமம்!
விழுப்புரம்: பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சுத்த ஹோமம் மற்றும் தன்வந்திரி ஹோமம் துவங்கியது. விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பத்தில் உள்ள, அமிர்தவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ சுத்த மகா ஹோமம் கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, வரும் 2ம் தேதி வரை ஹோமம் நடக்கிறது. பத்து நாட்கள் நடக்கும் சிறப்பு ஹோமத்தில் சேர்ப் பதற்கு அனைத்து பழ வகைகள், நெய், தேன், கொப்பரை தேங்காய், மூலிகைப் பொருட்கள் ஆகியவைகளை பக்தர்கள் கொடுத்து பயனடையலாம். பூஜையில் லட்சுமி நரசிம்மர், ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள், அமிர்தவள்ளி தாயார், ராமானுஜர், செல்வர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். இன்று சுவாதி சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடக்கிறது. வரும் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, தலைமை அர்ச்சகர் பார்த்தசாரதி, கிராம மக்கள் செய்து வருகின்றனர்.