பாராக மாறிய கோவில் தெப்பக்குளம்: அறநிலையத்துறை அலட்சியம்!
ஓசூர்: ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் உள்ளது. தேர்த்திருவிழா காலங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், தெப்பக்குளத்தில், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு விட்டு, சந்திரசூடேஸ்வரரை வழிபட செல்வது வழக்கம்.பல ஆண்டுகள் பழமையான இந்த தெப்பக்குளம், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால், சரியாக பராமரிக்கப்படுவதில்லை. தெப்பக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை, குடிமகன்கள், பாராக மாற்றி வருகின்றனர். மது அருந்தி விட்டு, பாட்டில்களை கோவில் குளத்தில் வீசுவதால், குளத்தில் நீராடும் பக்தர்கள் காலை உடைந்த மது பாட்டில்கள், பதம் பார்க்கின்றன. மேலும், குடிமகன்கள் சிலர், தெப்பக்குள படிக்கட்டுகளில், மது பாட்டில்களை உடைத்து வருகின்றனர்.தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால், தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு, தெப்பக்குளத்தை தூர்வாரி, புதிய தண்ணீர் நிரம்ப வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தெப்பக்குளத்தை பராமரிக்க வேண்டிய ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அலட்சியமாக இருக்கின்றனர். இதை, மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என, பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.