உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் ‘மொபைல்’ முகம் சுளிக்கும் பக்தர்கள்!

கோவில்களில் ‘மொபைல்’ முகம் சுளிக்கும் பக்தர்கள்!

திருப்பூர்: கோவில்களில் சுவாமி வழிபாட்டுக்கு இடையூறாக, சிலர் மொபைல்போனில் பேசுவதால் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர். மன அமைதி வேண்டியும், பிரார்த்தனைக்காகவும் பக்தர்கள் கோவில்களுக்கு வருகின்றனர். கோவில் வளாகம், கருவறை முன்பகுதிகளில் அமைதி காப்பது அவசியம். மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில், கோவிலுக்கு வரும் சிலர், பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும் இடத்தில் மொபைல்போனில் பேசி, இடையூறு செய்கின்றனர். கோவிலுக்குள் வரும்போது மொபைல் போனை அணைத்து வைப்பது, அல்லது ‘சைலண்ட்’டில் வைத்திருக்க அறிவுறுத்தினாலும், பலரும் பின்பற்றுவதில்லை. கருவறை முன்மண்டபத்தில், சுவாமி வழிபாட்டுக்கு காத்திருக்கும்போது, அதிக சத்தத்துடன் மொபைல்போன் திடீரென அலறுவது, பக்தர்களை திடுக்கிட வைக்கிறது. சிலர், சினிமாவில் வரும் குத்து பாடல் களை ‘ரிங் டோன்’ ஆக வைத்திருப்பதால், மொபைல்போன் ஒலிக்கும்போது, பக்தர்கள் பலரும் முகம் சுளிக்கின்றனர்.

சில முக்கிய கோவில்களில் மட்டுமே, ‘கோவிலுக்குள் மொபைல் போனில் பேசக்கூடாது’, என்ற அறிவிப்பு காணப்படுகிறது; அறிவிப்பு இருந்தாலும், பலரும் அதை பொருட்படுத்துவதில்லை. கோவில்களில், மொபைல்போன் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும்; இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களில், மொபைல்போன் பயன்பாட்டை தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !