உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோவிலில் சிவன் சிலை கண்டெடுப்பு!

ஸ்ரீரங்கம் கோவிலில் சிவன் சிலை கண்டெடுப்பு!

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், புதைந்து இருந்த சிவன், நர்த்தன விநாயகர் சிலைகள் மற்றும் ஐந்து செப்புத்தகடுகள், நேற்று கண்டெடுக்கப்பட்டன. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, 10.45 கோடி ரூபாயில். திருப்பணி நடந்து வருகிறது. கோவில் வளாகத்திலுள்ள, 54 சன்னிதிகளில், நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டிய செங்கல் சுவர், தரைத்தளத்தில் பதித்த பட்டியக்கல் வரை உள்ள, கான்கிரீட் தளம் ஆகியவை உடைத்து, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, வெளி ஆண்டாள் சன்னிதி, வேணு கோபால சுவாமி சன்னிதி ஆகியவற்றில் மறைந்திருந்த, புடைப்பு சிற்பங்கள் தெரிய வந்தன. இந்நிலையில், நேற்று காலை, பார்த்தசாரதி சன்னிதியின் தரைத்தளத்தில், கான்கிரீட்டை உடைத்து, மண்ணை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். சன்னிதியில், இரண்டரை அடி ஆழம் வரை, மண்ணை அகற்றிய போது, படுக்கை நிலையில், சுவாமி சிலைகள் புதைந்திருந்தன. இதையடுத்து, கோவில் இணை ஆணையர் ஜெயராமன் முன்னிலையில், சிலைகளை மீட்டனர். அவை, சந்திரசேகரர் (சிவன்), நர்த்தன விநாயகர் சிலைகள் என்பது தெரிந்தது. இது குறித்து, இணை ஆணையர் ஜெயராமன் கூறியதாவது: மண்ணில் புதையுண்டு இருந்த, இரண்டு அடி சந்திரசேகரர் சிலை, ஒன்றரை அடி நர்த்தன விநாயகர் சிலை மற்றும் ஐந்து செப்பு தகடுகள் கிடைத்து உள்ளன. சிலைகள் ஒவ்வொன்றும், 15 கிலோ எடையுடன் உள்ளன. பழங்கால எழுத்துக்களுடன் அமைந்த ஐந்து தகடுகளை இணைத்து, வ ளையம் போட்டுள்ளனர். மேலும், வாராகி(பன்றி)யின் உருவம் பொறித்த முத்திரை உள்ளது. இந்த செப்பு தகடு, 10 கிலோ இருக்கும். இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பின்னரே, சிலை எந்தவகை உலோகத்தால் ஆனது, யார் காலத்து சிலை என்பது தெரியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !