உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோயில் கோபுரங்களில் தீ விபத்து: கைது செய்ய பக்தர்கள் மறியல்!

காளையார்கோயில் கோபுரங்களில் தீ விபத்து: கைது செய்ய பக்தர்கள் மறியல்!

காளையார்கோவில்: காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தில் வேயப்பட்டிருந்த கீற்று தீ பிடித்து எரிந்ததையடுத்து கிராம மக்கள்,பக்தர்கள் உண்ணாவிரதம், மறியல் போராட்டம் நடத்தினர். சிவகங்கை அருகேயுள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது.

இதற்காக இரு கோபுரங்களிலும் சாரம் அமைத்து தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் வெளியான தகவலால் கோயில் முன்பு அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பட்டாசிலிருந்து வெளியேறிய தீப்பொறி, கோபுர ஓலைக்கூரையில் பட்டு பற்றி எரிந்தது. இதில் இருகோபுரங்களும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள்,பக்தர்கள் காலை கோயில் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும், அரசே பொறுப்பேற்று கோயிலில் சீரமைப்பு பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் முன்பு வாணவேடிக்கை இருக்கக்கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள்
சிவகங்கை-தொண்டி ரோட்டில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !