வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இப்பகுதி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி நடத்தும் பாரம்பரியத் திருவிழா இதுவாகும். மழைக்கு அதிபதியாக உள்ள முத்தாலம்மனுக்கு விழா எடுத்து வழிபட்டால் மழைபெய்து ஊர் செழிப்படையும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன் காரணமாக ஆண்டு தோறும் வத்திராயிருப்பு, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல நுõற்றாண்டுகளாக அம்மனை வழிபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா அக். 1 முதல் கலைவிழாவுடன் துவங்கியது. இயல், இசை, நாடக கலைகள் அடங்கிய கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒருவாரம் நடந்தது.
இறுதி நாளான இன்று(அக்.8) முத்தாலம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அதிகாலையில் அலங்காரத் தேரில் எழுந்தருளிய முத்தாலம்மன் வீதியுலா சென்று மதியம் கோயிலை அடைந்தார். அங்கு பக்தர்கள் எதிர்சேவை செய்து அம்மனை வரவேற்றனர். பெண்கள் மண்சிலைகளை காணிக்கையாக செலுத்தியும், மஞ்சள் நீர் ஊற்றியும் வழிபட்டனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்ததுடன் பூஜை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.