திருவண்ணாமலையில் தீர்த்தவாரி: லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அண்ணாமலையார், மற்றும் உண்ணாமலையம்மனை வழிபட்டனர். திருவண்ணாமலையில் உள்ள மலையை, சிவனாக நினைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த மலையில் சித்தர்கள் உள்ளதாக, மக்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு வருகின்றனர். இதனால், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கிரிவலம் சென்று, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை தரிசித்து வருகின்றனர். இதில், நேற்று பவுர்ணமி தினம் என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, ஸ்வாமி மற்றும் அம்மனை வழிபட்டு சென்றனர். சந்திர கிரகணம் முடிந்ததை அடுத்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பிரம்ம தீர்த்த குளகரையில் சூலம் ரூபாத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.