ஏர்வாடி இடர்நீக்கி அம்மன் கோயில் முளைப்பாரி விழா!
கீழக்கரை : திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கனாரேந்தல் கிராமத்தில் இடர்நீக்கி அம்மன் கோயில் முளைப்பாரி விழா நடந்தது. காப்புகட்டுதலுடன் தொடங்கிய விழாவில் புல்லாணி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டனர். நாள்தோறும் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. சேதுக்கரை அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் பாரி கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏர்வாடி: யாதவர்தெருவில் உள்ள வாழவந்தமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மகான் அல்-குத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்காவின் முன்புறம் பெண்கள் முளைப்பாரியை இறக்கி வைத்து கும்மி கொட்டினர். தர்காவில் இருந்து துஆ செய்யப்பட்டு ‘பாத்தியா’ ஓதப்பட்டு தர்கா நிர்வாக சபையினரால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சின்னஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்வு நடந்தது.