பழமையான கோவிலில் உழவார பணி!
சொரக்காய்பேட்டை : சொரக்காய்பேட்டை அடுத்த, விஜயராகவபுரம் விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவிலில், உழவார பணி நடந்து வருகிறது. இதில், கோவில் கிணறு நேற்று துார்வாரப்பட்டது. கொற்றலை ஆற்றங்கரையில், சொரக்காய்பேட்டை அடுத்துள்ளது விஜயராகவபுரம். இங்கு, 500 ஆண்டுகள் பழமையான விஜயவள்ளி உடனுறை விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது.சந்தான பாக்கியம் அருளும், பெருமாள் என்ற சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு. விஜயராகவபுரம் மற்றும் சொரக்காய்பேட்டையைச் சேர்ந்த பகுதிவாசிகள், கோவிலில் தற்போது உழவார பணி மேற்கொண்டு வருகின்றனர்.கோவில் நந்தவனத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து, பூஜைக்காகவும், செடிகளுக்காகவும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக, கிணற்றில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.இதையடுத்து, பகுதிவாசிகள், கிணற்றை தாங்களாகவே துார் வாரும் பணியை மேற்கொண்டனர். தற்போது கோவில் கிணற்றில் தண்ணீர் போதுமான அளவிற்கு நிரம்பியுள்ளது.