வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா!
திருவள்ளூர் : புரட்டாசி மாத, சாற்று முறை உற்சவ தினத்தையொட்டி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் சென்று விட்டு, நேற்று, திருவள்ளூருக்கு திரும்பினார். புரட்டாசி மாதம், வேதாந்த தேசிகன் அவதார உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்தின் சாற்று முறை தினத்தன்று, திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் வருவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதற்காக, கடந்த 10ம் தேதி, வீரராகவப் பெருமாள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு சென்று, பின், ஸ்ரீபெரும்புதுார் வேதாந்த தேசிகன் கோவிலில் நடந்த சாற்று முறை உற்சவத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, இரவு, வேதாந்த தேசிகரும், வீரராகவப் பெருமாளும் இணைந்து, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று அதிகாலை, வீரராகவப் பெருமாள் விடைபெற்று, திருவள்ளூர் திரும்பினார்.