கும்பகோணம் மகாமக திருவிழாவுக்குரூ.32.50 கோடிக்கு திட்ட மதிப்பீடு!
கும்பகோணம்:கும்பகோணத்தில், வரும், 2016ல் நடைபெறவுள்ள மகாமக பெருவிழாவுக்காக, பொதுப்பணித்துறை சார்பில், 32.50 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கும்பகோணத்தில், வரும், 2016ல் மகாமகத் திருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை சார்பில், திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி, கும்பகோணம் நகரின் மையப் பகுதியில், காவிரி ஆற்றின் இடது புறக்கரையில் நடைபாதை, பூங்கா அமைக்க, ஐந்து கோடியே, 50 லட்சமும், பழவாத்தான்கட்டளை கிராமத்தில், புதிய விருந்தினர் இல்லம் கட்ட, ஏழு கோடியும், காவிரி ஆற்றில் கும்பகோணம் நகரில் மையப் பகுதியில் இடது, வலது புறக்கரையை பலப்படுத்தி, சாய்வு தளம் மற்றும் படித்துறைகள் அமைக்க, ஏழு கோடியும், கும்பகோணம் நகரின் மையப்பகுதியில், அரசலாற்றில் இரு கரைகளையும் பலப்படுத்தி, படித்துறைகள், சாய்வுத் தலம் அமைக்க, 15 கோடி, என மொத்தம், 32.50 கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும், என பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசுக்கு அனுப்பியுள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.கும்பகோணம் நகரில் வடக்குப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கச்சேரி ரோட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கு செல்ல வசதியாக கருப்பூர் சாலைக்கும் அரசு மருத்துவமனைக்கும் இடையே, காவிரி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும். அதே போல், தென் பகுதியில் அரசலாற்றின் குறுக்கே சத்தியா நகருக்கும் எலுமிச்சங்காபாளையத்திற்கும் இடையே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனவே, பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீடுகளை தயாரித்து முன்கூட்டியே வழங்கினால் தான், அரசு நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், என்பதே கும்பகோணம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.