தர்மபுரி சிவசுப்பிரமணிய கோவிலில் லட்சார்ச்சனை விழா
தர்மபுரி :தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், 50ம் ஆண்டு கந்தசஷ்டி, லட்சார்ச்சனை விழா, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.விழாவை முன்னிட்டு, நேற்று ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், லட்சார்ச்சனை துவக்கமும் நடந்தது. இன்று முதல், வரும், 30ம் தேதி வரை நாள் தோறும் ஸ்வாமிக்கு மூன்று கால அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. விழாவில், முக்கிய நாளான, 29ம் தேதி மாலை, 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சொர்ண மண்டபத்தில் ஸ்வாமி புறப்பாடும், 8 மணியளவில் பைபாஸ் ரோட்டில் உள்ள ஸ்வாமி நிலத்தில், வாணவேடிக்கையுடன் சூரசம்ஹார நிகழ்ச்சியும், இரவு, 12 மணிக்கு பன்னீர் அபிஷேகமும் நடக்கிறது.வரும், 30ம் தேதி காலை ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகமும், லட்சார்ச்சனை பூர்த்தி ஹோமமும், 1 மணிக்கு இடும்பன் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. இரவு, 9 மணிக்கு, 10.30 மணிக்குள் தெய்வானை திருக்கல்யாணமும், பொன்மயில் வாகனத்தில் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்த சிவனேய செல்வர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.