உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

மாசாணியம்மன் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!

ஆனைமலை:தீபாவளியை தொடர்ந்து வந்த அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை சிறப்பு பூஜையில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள், முந்தைய நாள் இரவே கோவிலில் தங்குகின்றனர். இம்மாத அமாவாசை, தீபாவளியை ஒட்டி வந்ததால் இரவே வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பக்தர்கள் நலன் கருதி, விடிய, விடிய நடை திறந்து இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலையில் ஆனைமலை உப்பாறு மற்றும் ஆழியாற்றில் புனித நீராடிய பக்தர்கள், பயபக்தியுடன் அமாவாசையன்று நடைபெறும் முதல் கால பூஜையில் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த உச்சிகாலை பூஜை, சாயரட்சை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட அனைத்து பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் வந்த பக்தர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் விடிய, விடிய இயக்கப்பட்டன. பக்தர்களின் வாகனங்கள் அதிகரிப்பினால் சேத்துமடை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அனிதா, புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !