திருத்தணி முருகன் சஷ்டி விழா: 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழாவில், நேற்று, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதால், மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி என்கிற லட்சார்ச்சனை விழா, கடந்த, 24ம் தேதி துவங்கியது. காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பம், பட்டு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, லட்சார்ச்சனை விழாவும் நடந்து வருகிறது. நேற்று, மூன்றாம் நாள் விழாவை முன்னிட்டு, காலை, 10:00 மணிக்கு உற்சவர் சண்முகபெருமானுக்கு, தங்க கவச அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் கந்தசஷ்டி என்பதால், வழக்கத்திற்கு மாறாக, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், மூலவரை தரிசிக்க, பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.