உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 300 தமிழக கோவில்களில் நம் கோவில் திட்ட பூஜைகள்!

300 தமிழக கோவில்களில் நம் கோவில் திட்ட பூஜைகள்!

திருப்பதி: தமிழகத்தில் உள்ள, 300 கோவில்களில், நம் கோவில் திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்படும் என, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அறநிலையத் துறை இணைந்து, 2012ல் ஆடி மாத பவுர்ணமி முதல், நம் கோவில் திட்டம் எனும் திட்டத்தை துவங்கி, ஆந்திர மாநிலம் முழுவதிலும் உள்ள, 17 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தின.பின், கார்த்திகை மாத பவுர்ணமி அன்றும், இந்த திட்டத்தின் கீழ் பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்தானம் இரண்டு முறை, ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல், தெலுங்கானாவிலும் பூஜைகள் செய்து வருகிறது. இம்முறை, கார்த்திகை மாத பவுர்ணமிக்கு, தமிழகத்தில், 300 மற்றும் கர்நாடகாவில், 200 கோவில்களில் இந்த பூஜையை நடத்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. நவ., 6ம் தேதி கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, (தெலுங்கு மாத காலண்டர் அடிப்படையில்) ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள, 54,300 கோவில் களில், நம் கோவில் திட்டப்படி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.இந்த பூஜைக்கு தேவையான பொருட்களை, தேவஸ்தானம், ஏழுமலையான் திருவடியில் வைத்து பூஜை செய்து, அனைத்து கோவில்களுக்கும் அனுப்ப தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !