உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்ட ராமர் சன்னதியில் பட்டியக்கல் பதிக்கும் பணி

கோதண்ட ராமர் சன்னதியில் பட்டியக்கல் பதிக்கும் பணி

திருச்சி: ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் சன்னதியில், தரைத்தளத்தில் கான்கிரீட் காரைகள் பெயர்க்கப்பட்டதை அடுத்து, பட்டியக்கல் பதிக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தாண்டு கும்பாபிஷேகம் செய்வதற்காக, 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரம், வெள்ளைக்கோபுரம், ரங்கா ரங்கா கோபுரத்திற்கு வண்ணம் தீட்டும் பணிகளும், 54 சன்னதிகளின் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட சுவர்கள் அகற்றப்பட்டு, தரைத்தளத்தில் உள்ள கான்கிரீட், மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால், கோவில் பழமைக்கு திரும்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சந்திர புஷ்கரணி அருகிலுள்ள கோதண்டராமர் சன்னதியில், கான்கிரீட் தரைத்தளம் அகற்றப்பட்டது. இங்கு, தரைத்தளத்தில் பட்டியக்கல் இல்லாததால், மண் அகற்றிய இடத்தில் புதிதாக பட்டியக்கல் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தவிர, கோவில் வளாகத்தில் மண் கொண்டு நிரப்பப்பட்ட இடங்களில், மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது. மலை போல குவிந்துள்ள மண்ணை, ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர். கோவில் வளாகத்தில் தொடர்ந்து, செங்கல் சுவர்கள், தளங்கள் இடிக்கப்பட்டு அகற்றும் பணி நடக்கிறது. இப்பணிகள் முடிந்த பின், முன்பக்கம் உள்ள கோவில் அலுவலக கட்டிடம் உள்ளிட்டையும் அகற்றப்படும், என அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !