உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை தேவஸ்தான வருமானம் ரூ.10 கோடி குறைந்தது ஏன்?

திருமலை தேவஸ்தான வருமானம் ரூ.10 கோடி குறைந்தது ஏன்?

திருப்பதி : திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானத்தில், 10 கோடி ரூபாய் குறைந்துள்ளது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டை, 2010ல், தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

25 ஆயிரம் பக்தர்கள் : இதற்கு, பக்தர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தினமும், 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்கள், இந்த சேவை மூலம் ஏழுமலையானை தரிசித்தனர். இதன் மூலம் தினமும், 50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 2013- - 14 நிதிநிலை அறிக்கையில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம், 190 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது. தற்போது, 300 ரூபாய் விரைவு தரிசன சேவையை, பக்தர்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், இணையதளம் மூலம் அதற்கான முன்பதிவை, ஆகஸ்ட் முதல் தேவஸ்தானம் நடைமுறைபடுத்தியது.

இந்த முறையில் தினமும், 11 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளம் மூலம் அளிக்கப்படுகிறது. அதில், 5,832 டிக்கெட்கள் மட்டுமே, முன்பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட், 20ம் தேதியில் இருந்து, அக்டோபர், 24ம் தேதி வரையான, 65 நாட்களில், 7.15 லட்சம் டிக்கெட்கள் இணையத்தில் ஒதுக்கப்பட்டன. அதில், 3.53 லட்சம் டிக்கெட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன. கடந்த, 65 நாட்களில், இந்த சேவை மூலம், 21.45 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். ஆனால், 11.35 கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. இதனால், தேவஸ்தானத்திற்கு, 10 கோடி ரூபாய் வருமானம் குறைந்தது. இணையதளம் மூலம், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் குறைவாக முன்பதிவு செய்யப்படுவதால் அதை ரத்து செய்து விட்டு, வழக்கம் போல் திருமலையில், ’கரன்ட் புக்கிங்’ கீழ் அதை வழங்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை தேவஸ்தானம் ஏற்கவில்லை. விரைவு தரிசன டிக்கெட் இம்மாதம், 30ம் தேதி அல்லது, நவ., 1ம் தேதி முதல், திருமலையில் வழங்கும், ’கரன்ட் புக்கிங்’ விரைவு தரிசன டிக்கெட்டை ரத்து செய்து விட்டு, தினமும், 18 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்களை இணையதளம் மற்றும் அஞ்சலகம், இ - தர்ஷன் கவுன்டர்கள், மீ - சேவா கவுன்டர்களில் வழங்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !