உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில் மண்ணரிப்பால் சேதம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் கோவில் மண்ணரிப்பால் சேதம்!

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள 530 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் பாதம் கோவில் பராமரிப்பு குறைப்பாட்டால் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமனின் மனைவி சீதையை, ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்ற பின் ராமபிரானும், லட்சுமணனும், அனுமான் சேனைகளுடன், ராமேஸ்வரம் கெந்த மாதன பர்வதம் என்னும் இடத்தில் நின்று இலங்கை செல்ல கடலில் பாலம் அமைப்பது என, ஆலோசனை செய்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமர் நின்ற இடத்தில் அவரது இரு பாதத்தை வைத்து பூஜிக்க முடிவு செய்த விஜய நகர சாம்ராஜ்ய மன்னர்கள், 1480ம் ஆண்டுக்கு முன், ராமர் பாதம் கோவிலை உருவாக்கி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரத்தின் நில மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் மணல் மேட்டில் அமைந்துள்ள இக்கோவில், சுண்ணாம்பு பவள பாறைகளால் கட்டப்பட்டது. ராமேஷ்வரத்தில், 530 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளிக்கும் ராமர் பாதம் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் கட்டுபாட்டில் உள்ளது. கடந்த 20 ஆண்டுக்கு மேலாக பராமரிப்பின்றி உள்ளதால், இக்கோவிலை சுற்றி மண் அரிப்பு ஏற்பட்டு, பவள பாறையில் அமைக்கப்பட்ட அடித்தள சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்நிலை நீடித்தால், கோவில் முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். வரும், 2015ல் நடைபெற உள்ள திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன், ’ராமர் பாதம்’ கோவிலில், மராமத்து பணி செய்ய இந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !