உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

மருதமலையில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

கோவை : மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று கோலாகலமாக நடந்தது. முருகப்பெருமானின் ஏழாம் படை வீடான, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 24ம் தேதி, காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது.தொடர்ந்து நான்கு நாட்கள், முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஆறாம் நாளான நேற்று, சூரசம்ஹாரம் விழா நடந்தது.அதிகாலை நடை திறக்கப்பட்டு, 16 திரவியங்களுடன் உஷ கால பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது. மதியம் 3.00 மணியளவில், மூலவரிடம் வேல் வாங்கி, உற்சவர் சுப்பிரமணியசுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வதம் செய்ய கிளம்பினார். தொடர்ந்து, நான்கு சூரனையும் வதம் செய்த பின்னர், முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.இவ்விழாவிற்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஏழாம் நாளான, இன்று காலை 7:30 மணிக்கு முருகன், வள்ளி மற்றும் தெய்வானையை திருமணம் செய்யும் திருக்கல்யாணம் நிகழ்வு நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்ததும், முருகன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் திருக்கல்யாணம் நிகழ்வுக்கு பிறகு, கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தை உண்டு, தங்கள் விரதத்தை முடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !