உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பழநியில் திருக்கல்யாணம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பழநியில் திருக்கல்யாணம்!

பழநி : கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா சரண கோஷத்துடன், நான்கு கிரிவீதிகளில் சூரன்கள் வதம் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. பழநிமலைக்கோயிலில் அக்.,24ல் காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. நேற்று சூரசம்ஹாரத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு படையல் நைவேத்தியம் நடந்தது. பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. அதன்பின் சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் பராசக்திவேல் வாங்கி, கிரிவீதிக்கு புறப்பட்ட உடன் சன்னதி திருகாப்பிடப்பட்டது. சூரசம்ஹாரம்: திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன், தெற்குகிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் ஆகிய அசுரர்களை முருகப்பெருமான் வதம் செய்தார். இரவு 10 மணிக்கு சின்னக்குமராசுவாமி மலைக்கோயிலுக்கு புறப்படாகி சம்ப்ரோட்சனம் பூஜைக்கு, பின் அர்த்தஜாம பூஜை நடந்தது. சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணம்: கந்தசஷ்டி விழாவில் இன்று காலை 10 மணிக்குமேல் 11 மணிக்குள் மலைக்கோயிலில் சண்முகர் வள்ளி,தெய்வானைக்கும், இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !