சேலம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா!
சேலம் : கந்தசஷ்டியை முன்னிட்டு, நேற்று, சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நடந்த சூரசம்ஹாரத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, "அரோகரா கோஷம் முழங்க வழிபட்டனர். முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, அக்.,24ம் தேதி துவங்கி நடந்து வந்தது. கந்தசஷ்டியை முன்னிட்டு, பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி விரதம் மேற் கொண்டு வந்தனர். இதில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நேற்று மாலை நடந்தது. சேலம், அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பகல், 12 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
* சேலம், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில், நேற்று காலை, தங்கக் கவச சாத்துபடியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நடந்த சூரசம்ஹாரத்தில், நவவீரர் விஜயம், நவவீரர்கள் சூழ ஆட்டுக்கிடா வாகனத்தில் சண்முகர் புறப்பாட்டை தொடர்ந்து, சூரனை, முருகன் வதம் செய்யும் வைபவம் நடந்தது. இரவில், செந்தூர் வேலவன் அலங்காரம் செய்யப்பட்டு, தங்கமலர்களால் அச்சனை செய்யப்பட்டது.
* சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் நேற்று காலை, மகா கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. இதில், திரளாக பெண்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டியை பாராயணம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
* சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஐயப்பன் பஜனை மண்டலியில், நேற்று மாலை, பாலசுப்பிரமணிய ஸ்வாமிக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து திருப்புகழ் பஜை நடந்தது.
* சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை முருகன் கோவிலில், கந்தசஷ்டியின் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பாலசுப்பிரமணியருக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* சேலம், உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில் எழுந்தருளியுள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், நேற்று காலை, சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சுப்பரபாதம், கோபூஜை, குரு வந்தனம், குரு பூஜை, அபிஷேக ஆராதனையும், மாலையில் சூரனை வதம் செய்யும் சம்பவம் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா... கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.
* சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில், பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், நடப்பாண்டும், சூரசம்ஹார விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.நேற்று காலை, உற்சவர் கந்தசாமிக்கு காப்புகட்டி, சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, முக்கிய நிகழ்ச்சியாக, மூலவருக்கு, கந்தசஷ்டி சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அதன்பின், கோவில் பரம்பரை அறங்காவலரும், பூசாரியுமான அம்பிகாதேவி தலைமையில், சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதில், கந்தசாமி, சூரனை வதம் செய்யும்போது, அதை எதிர்கொண்டு சூரன் வருவதை, நவ வீரர்களான ஒன்பது வீரர்கள், சூரனை, விரட்டி அடிப்பதும், பின், மீண்டும் வருவதும், இறுதியில், கந்தசாமி, சூரனை துவம்சம் செய்து, அழித்தது, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தது.
* மகுடஞ்சாவடி, சுப்ரமணிய ஸ்வாமி கோவிலில், நேற்று மாலை, 4 மணியளவில், ஸ்வாமி, சூரனை வதைத்து, சூரசம்ஹாரம் செய்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
* சேலம் ஃபேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், செவ்வாய்ப்பேட்டை சித்திரைசாவடி முருகன் கோவில், ஏற்காடு அடிவாரம் ஆறுபடை முருகன் கோவில், ஆத்தூர் அடுத்த வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் ஸ்வாமி கோவில், ஜலகண்டாபுரம் சுப்பிரமணியர் ஸ்வாமி கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், சூரசம்ஹார விழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.