சபரிமலையில் சுத்தம் செய்யும் பணி!
சபரிமலை : மண்டல-மகரவிளக்கு காலம் நெருங்கி வரும் நிலையில் சபரிமலையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதனை மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைத்தார். சபரிமலையில் மண்டல கால பூஜை தொடங்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது. வரும் 16-ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கிறது. 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்ததும் மண்டலகால பூஜை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 1500 தொண்டர்கள் சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிக்கு முன்வந்துள்ளனர். இதற்கான தொடக்கவிழா சபரிமலை சன்னிதானத்தில் நடைபெற்றது. தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் குத்து விளக்கேற்றி இதனை தொடங்கி வைத்தார். இதில் தேவசம்போர்டு உறுப்பினர் சுபாஷ்வாசு, சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சபரிமலை சுற்றுவட்டாரங்களில் தேங்கியுள்ள குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் தனித்தனியாக எடுத்து அப்புறப்பபடுத்தி வருகின்றனர்.