அந்தியூர் குருநாதஸ்வாமி கோவிலில் 400 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம்
அந்தியூர் : அந்தியூர் குருநாதஸ்வாமி கோவிலில், 400 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ளது குருநாத ஸ்வாமி கோவில். ஆண்டுதோறும் ஆடிமாதம் தேர் திருவிழா நடக்கும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அப்போது ஒரு வாரம் வரை மாடு, குதிரை சந்தைகள் நடக்கும்.கோவிலில் குருநாத ஸ்வாமி, பெருமாள், காமாட்சி அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன. பாண்டிய மன்னர் காலத்தில் இக்கோவில் உருவானதாக கருதப்படுகிறது. 400 ஆண்டுக்கு முற்பட்டது. கோவிலை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை, அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் முடிவு செய்தனர்.அதன்படி மூன்று ஆண்டுக்கு முன் திருப்பணி துவங்கியது. பொதுமக்கள் பங்களிப்புடன் 35 லட்ச ரூபாய் மதிப்பில் பிரகார மண்டபம், சபா மண்டபம் கட்டப்பட்டுள்ளது.குருநாத ஸ்வாமி, பெருமாள் மற்றும் காமாட்சி அம்மனுக்கு தனித்தனி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கும்பகோணம், நன்னிலம், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஸ்தபதியர் வரவழைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட சிற்பிகளை கொண்டு திருப்பணி நடந்தது.அமெரிக்க வாழ் இந்தியரான, அந்தியூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் ரூ.50 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்நிலையில், குருநாத ஸ்வாமிக்கு மூன்று நிலை, பெருமாள், காமட்சிஅம்மனுக்கு இரண்டு நிலை கொண்ட கோபுர விமானங்கள் அமைக்கும் பணி நடந்துள்ளது.திருப்பணிகள் நிறைவு பெறும் தருணத்தில் உள்ளது. யாக சாலை பூஜை நடத்துவதற்கான ஆயத்த பணிகள் நடக்கிறது.வரும் 27ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், அறங்காவலர் சாந்தப்பன் தெரிவித்தனர்.